சரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி? | Steps to Speak English Fluently


அதிகமானவர்களால் ஆங்கிலத்தில் எழுத, வாசிக்க மற்றும் ஒருவர் பேசுவதை நன்றாக புரிந்துகொள்ள முடிந்தாலும், ஆங்கிலத்தில் பேசுவது என்று வரும் போது சிரமமாக இருக்கும். 

உங்கள் நிலமையும் இதுதான் என்றால் அதைப் பற்றி வீணாக கவலைகொள்ளவோ, உங்களை குறைத்து மதிப்பிடவோ வேண்டாம். ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கற்கும் எல்லோருக்கும் இது ஒரு பொதுவான பிரச்சினை தான்.

இங்கே இந்த கட்டுரையில் நீங்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச உதவும் முக்கிய 4 படிமுறைகளைப் பற்றி பார்ப்போம். மேலே கூறியது போன்று உங்களால் ஆங்கிலத்தில் பேசுவதில் சிரமம் இருக்குமெனில், கட்டாயம் நீங்கள் இந்த படிமுறைகளை முயற்சித்துப் பார்க்க வேண்டும். 

இங்கே தரப்பட்டுள்ள படிமுறைகள் எதுவும் உங்களை 10 நாட்களில் ஆங்கிலத்தில் சரளமாக பேச வைக்கவோ அல்லது குறுகிய காலத்தில் உங்களை ஆங்கிலத்தில் மிகவும் தேர்ச்சியுடைவராக மாற்றவோ உருவாக்கப்பட்டவையல்ல. மாறாக, நீங்கள் நம்பிக்கையுடன் இவற்றை சரியாக பின்பற்றினால், காலப்போக்கில் உங்களால் கட்டாயம் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச முடியும்.

சரி, வாருங்கள் படிமுறைகளுக்கு செல்வோம்.

படிமுறை - 01

உங்களால் ஆங்கிலத்தில் பேச முடியாத காரணத்தை சரியாக இனங்காணுங்கள்.

ஒரு பிரச்சினையை தீர்க்க முன்னர் அந்தப் பிரச்சினையை சரியாக இனங்காண்பது மிகவும் முக்கியமானதாகும்.

இங்கே உங்களால் ஆங்கிலத்தில் பேச முடியாத பிரச்சினைக்கான காரணம் என்ன?

நீங்கள் ஆங்கிலத்தில் எழுதும் போது அல்லது வாசிக்கும் போது, நீங்கள் எழுதும் அல்லது வாசிக்கும் விடயத்தைப் பற்றி சிந்திக்க போதுமான நேரம் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதுவதென்றாலும் உங்களால் ஆழமான வசனங்களையெல்லாம் பற்றி சிந்திக்க நேரம் இருக்கும். ஆனால் நீங்கள் ஒருவருடன் ஆங்கிலத்தில் பேசும் போது அப்படியல்ல, நொடிப் பொழுதில் பதில் கூற வேண்டும் அல்லது உங்கள் கருத்துக்களை நொடிப் பொழுதில் பரிமாற வேண்டும். இங்கே உங்களுக்கு சிந்திப்பதற்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை. இதுவே நீங்கள் ஆங்கிலத்தில் பேச சிரமப்படுவதற்கான முதல் காரணமாகும்.

ஆகவே, ஆங்கிலத்தில் உங்களிடமுள்ள வாசிக்கும், எழுதும் திறமையை அப்படியே பேச்சுக்கு மாற்றி விட முடியாது என்பது இதிலிருந்து உறுதியாகிவிடுகிறது.

சரி, உங்களால் நொடிப்பொழுதில் ஆங்கிலத்தில் கதைக்க முடியாது என்பது இப்போது புரிந்துவிட்டது, ஆனால் இதற்கான தீர்வு என்னவாக இருக்கும்?

இதற்கான தீர்வு வேறொன்றும் இல்லை, நீங்கள் நொடிப்பொழுதில் ஆங்கிலத்தில் கதைப்பதற்கான ஒரு புதிய வழியை கண்டுபிடிக்க வேண்டும்.

இதை எப்படி செய்யப் போகிறீர்கள்? 

ஆம், இப்போது நீங்கள் இந்தத் தலைப்பின் முக்கிய பகுதிக்கு வருகிறீர்கள். ஆங்கிலத்தில் பேசும் போது உங்கள் வாழ்வில் வெவ்வேறு சூழ்நிலைகளில் பயன்படக்கூடிய சொற்களையும் வாக்கியங்களையும் ஒரு பட்டியலாக தயாரித்து சேமித்து வைக்கவேண்டும். 

அடிக்கடி நீங்கள் செல்லும் இடங்கள், நீங்கள் சந்திக்கும் நபர்கள், அவர்களுடன் உரையாடும் விடயங்கள் என வெவ்வேறாக பிரித்து பட்டியலிடுங்கள். பின்னர் அவ்விடங்களுக்கு பொருத்தமான வாக்கியங்களையும், சொற்களையும் தேட ஆரம்பியுங்கள். இதை உங்களால் ஒரு நாளில், வாரத்தில் அல்லது ஒரு மாதத்தில் செய்து முடிக்க முடியாமல் போகும். ஆனால் அண்ணளவாக ஒரு வாரத்தில் உங்களால் ஒரு இடத்தில் அல்லது ஒரு சூழ்நிலைக்கு போதுமான வாக்கியங்களையும், சொற்களையும் திரட்ட முடியும். 

நீங்கள் படிக்கும் மாணவர் என்றால் உங்கள் வகுப்பறை உரையாடல்களையும், நீங்கள் தொழில் புரிபவர் என்றால் உங்கள் அலுவலக உரையாடல்களையும் முதலில் பட்டியலிட முடியும்.

இவ்வாறு ஒவ்வொன்றாகத் திரட்டி, பட்டியலிட்டு இறுதியாக சேமிக்க வேண்டிய இடம் உங்கள் மூளை தான். ஒரு யுத்த வீரன் எதிரியை சந்திக்க எப்படி ஆயுதங்களை தயார்படுத்தி வைத்திருப்பானோ அதே போன்று நீங்களும் சொற்களையும், வாக்கியங்களையும் திரட்டி ஞாகபகத்தில் வைத்திருக்க வேண்டும். தேவைப்படும் போதெல்லாம் அவற்றை உபயோகிக்க அவை தயார் நிலையில் இருக்க வேண்டும்.

நீங்கள் இவ்வாறு ஒரு சிறிது காலத்துக்கு சொற்களையும் வாக்கியங்களையும் திரட்டி பட்டியலிட்டு நினைவில் வைத்திருந்தாலே உங்களால் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடிவதை நீங்கள் உணர்வீர்கள். மேலும் உங்களால் ஆங்கிலத்தில் பேச முடியும் எனும் தன்நம்பிக்கையும் உங்களுக்கு ஏற்படும்.

தொடர்ந்தும் புதிய இடங்களில் புதிய சூழ்நிலைகள் ஏற்படும் போது அவற்றுக்கு தகுந்த வாக்கியங்களையும் சொற்களையும் திரட்டுவதை பயிற்சியில் வைத்திருங்கள்.

படிமுறை - 02

உங்கள் ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்துங்கள்.

ஆங்கிலம் பேசும் போது நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு விடயம் தான் ஆங்கில சொற்களின் உச்சரிப்பு. சில வேளைகளில் ஆங்கில எழுத்துக்கள் தரும் உச்சரிப்புகள் அவை இடம்பெறும் சொற்களைப் பொருத்து மாறுபடும். ஆகவே நீங்கள் சொற்களின் உச்சரிப்புக்கு உங்களை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

சொற்களின் உச்சரிப்புக்கு உங்களை எவ்வாறு பழக்கப்படுத்திக்கொள்ள முடியும்?

ஆங்கில சொற்களை சரியாக உச்சரிக்க வேண்டுமென்றால் அவற்றை சரியாக உச்சரித்து பேசுகின்றவர்களுக்கு செவிமடுக்க வேண்டும். இதற்காக நீங்கள் YouTube தளத்தில் ஆங்கில உரைகளின் காணொளிகளை பார்வையிட முடியும்.

இவ்வாறன நோக்கத்தில் நாமும் சில காணொளிகளை தயாரித்துள்ளோம். இது போன்ற மேலும் பல காணொளிகளை விரைவில் எமது YouTube சேனலில் பதிவிடுவோம்.ஓர் சமீபத்திய ஆய்வின் படி, சொற்களின் உச்சரிப்பை செவிமடுத்து பேச ஆரம்பிக்கின்றவர்கள் இலகுவாக பேசுவதோடு, அவர்களின் பேச்சுத் திறன் மீது அவர்களுக்கு அதிக நம்பிக்கையும் இருந்துள்ளது எனக் கூறப்படுகிறது.

ஆகவே, உங்களால் முடிந்த அளவில் ஆங்கில சொற்களின் உச்சரிப்புக்களை கற்று மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

படிமுறை - 03

ஆங்கிலம் பேசுவதற்கு தயக்கம் காட்டாதீர்கள்

அநேகமானவர்களுக்கு ஆங்கிலம் பேசுவதில் சற்று தயக்கமும் பயமும் இருக்கும். ஆங்கிலம் சர்வதேச அளவில் பேசப்படும் ஒரு மொழி என்பதும் இன்றளவில் அதிகம் படித்தவர்களும், அதிகம் வசதி படைத்தவர்களும், உயர் பதவிகளை வகிப்பவர்களும் இதனை உபயோகப்படுத்துகிறார்கள் என்பதுமே இதற்கு முக்கிய காரணமாகும். ஆங்கிலத்தில் தவறாக கதைக்கும் போது மற்றவர்கள் தம்மை ஏளனமாக நினைத்துவிடுவார்களோ என்ற சிந்தனையும் உங்களுக்கு இருக்கும்.

சற்று சிந்தியுங்கள், நீங்கள் வாழும் நாட்டிலுள்ள ஆங்கிலம் தவிர்ந்த இன்னும் ஒரு மொழியை பேசுவதில் உங்களுக்கு ஏதாவது தயக்கமோ பயமோ உள்ளதா? ஆங்கிலம் பேசுவதில் உங்களிடமுள்ள அதே தயக்கமும் பயமும் ஒருபோதும் வேறு ஒரு புதிய மொழியை பேசுவதில் இருக்கவே இருக்காது. ஆங்கிலத்துக்கு உங்கள் மனதில் ஓர் இரண்டாம் மொழிக்கு நீங்கள் கொடுக்கும் அதே இடத்தை மட்டும் கொடுங்கள். 

மொழி என்பது தொடர்பாடலுக்கு நீங்கள் உபயோகிக்கும் ஒரு முறை அல்லது ஊடகமே தவிர அறிவையும், புத்தியையும் நிர்ணயிக்கும் ஓர் காரணியாக ஒருபோதும் கருதப்படுவதில்லை. அப்படியிருந்திருந்தால் பண்டைய இந்தியர்கள் பூச்சியத்தையும் அரேபியர்கள் இலக்கங்களையும் கண்டுபிடித்திருக்க முடியுமா? ஆகவே ஆங்கிலம் உங்கள் அறிவை விருத்தி செய்ய உதவி புரியுமெனினும் அது உங்கள் அறிவின் ஆழத்தை ஒருபோதும் நிர்ணயிப்பதில்லை.

மேலும் ஒருவர் ஆங்கிலத்தில் முழுமையான தேர்ச்சி பெற்றவர் எனின், ஆங்கிலம் கற்க மற்றும் ஆங்கிலத்தில் பேச முயற்சிக்கும் ஒருவரை ஒருபோதும் ஏளனம் செய்யவும் மாட்டார், ஏளனமாக நினைக்கவும் மாட்டார். மாறாக நீங்கள் ஆங்கிலம் கற்கவும், கதைக்கவும் உதவி செய்வார். 

ஆகவே, ஆங்கிலத்தில் கதைக்க உங்களிடம் உள்ள பயமும், தயக்கமும் நீங்கள் வீணாக உங்கள் மனதில் உருவாக்கிக்கொண்டவையாகும். அவற்றை முடியுமானவரை மனதில் இருந்து அகற்றிவிடுங்கள்.

படிமுறை - 04

கடினமான வார்த்தைகளை தவிருங்கள், இலகுவான முறையில் பேசுங்கள்.

ஆங்கில புத்தகங்களில் உள்ள கடினமான வார்த்தை பிரயோகங்களை உங்கள் பேச்சு வழக்கில் கொண்டுவர முயற்சிக்காதீர்கள். நீங்கள் பார்த்திருக்கக் கூடும், சிலர் ஆங்கிலத்தில் பேசும் போது ஓர் புத்தகத்தை வாசிப்பது போன்று அல்லது உரை நிகழ்த்துவது போன்று இருக்கும். இவ்வாறு ஆங்கிலத்தில் பேச முயற்சிக்க வேண்டாம். ஒரு பொதுவான ஆங்கில உரையாடலில் கடினமான சொற்கள் இருப்பதில்லை.

ஆகவே, மேற்கூறியவற்றை தவிர்த்து இலகு மொழி நடையில் பேச ஆரம்பியுங்கள். அவ்வாறு பேசும் போது ஆங்கிலம் பேசுவது உங்கள் மனதுக்கும் இலேசாக இருக்கும்.

ஆங்கிலத்தில் பேசுவதில் சிரமம் இருக்குமெனின் மேலே கூறப்பட்ட நான்கு படிமுறைகளையும் முடியுமான வரை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள். காலப்போக்கில் உங்களை அறியாமலே நீங்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதை உணர்வீர்கள்.

இக்கட்டுரை உங்களுக்குப் பயனுள்ளதெனின் கட்டாயம் உங்கள் நண்பர்களுடனும் பகிருங்கள்.
Previous Post Next Post