ஆங்கிலம் கற்பதன் முக்கியத்துவம் | Importance of Learning English


ஆங்கில மொழி இன்றளவிலும் அறிவியல், தொழில்நுட்பம், சர்வதேச போக்குவரத்து, கணினி மொழிகள், நாடுகளுக்கிடையான ஒப்பந்தங்கள் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றில் இன்றியமையாத  மொழியாக மாறிவிட்டது. ஆங்கிலம் தெரிந்தால் உங்கள் சொந்த நாட்டிற்குள் ஒரு நல்ல நிறுவனத்தில் நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும், அத்துடன் வெளிநாட்டிலும் இலகுவாக வேலை கிடைக்கும். இவற்றையெல்லாம் தாண்டி ஆங்கிலம் என்பது சர்வதேச தகவல் தொடர்பாடல், ஊடகங்கள் மற்றும் இணையத்தின் மொழியும் கூட. எனவே ஒருவரின் சமூகமயமாதல், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் தொழில் ரீதியான தேவைகள் என எல்லாவற்றிற்கும் ஆங்கிலம் மிக முக்கியமானதாகும்.

ஆங்கிலம் கற்றுகொள்ளவது ஏன் மிகவும் முக்கியமானது என்பதற்கான சில காரணங்களை இங்கே விரிவாகப் பார்ப்போம்.

ஆங்கிலம் ஓர் சர்வதேச தொடர்பாடல் மொழி

ஆங்கில மொழி உலகில் அதிகம் பேசப்படும் மொழியாக இல்லையெனினும், இது உலக நாடுகளில் 53 நாடுகளின் உத்தியோகபூர்வ மொழியாகக் கருதப்படுகிறது. ஆங்கில மொழியானது உலகளாவிய ரீதியில் கிட்டத்தட்ட 400 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இங்கே ஆங்கிலம் பேசப்படுவது என்பது ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆங்கிலம் பேசுவதை மட்டும் குறிப்பிடவில்லை. ஆங்கிலம் என்பது உலகில் மிகவும் பொதுவான இரண்டாவது மொழியாகக் கருதப்படுகிறது. உதாரணமாக நீங்கள் கூட நீங்கள் அறியாத வேறொரு நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம் பேச விரும்பினால், நீங்கள் இருவரும் முதலில் ஆங்கிலத்தில் தான் பேச முயற்சிப்பீர்கள்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் உலகில் 2 பில்லியன் மக்கள், அதாவது 200 கோடி மக்கள் ஆங்கிலம் கற்று வருவதாக கணிப்பிடப்பட்டுள்ளது. இதற்குக் கரணம் உலகம் பூராவும் உள்ள மக்கள் ஒருவரை ஒருவர் எளிதில் தொடர்புகொள்வதற்கு ஆங்கிலம் ஒரு பாலமாக அமைவதாகும். நீங்கள் ஆங்கிலம் கற்றால், ​​ஆங்கிலத்தை ஒரு பொதுவான மொழியாகப் பயன்படுத்தி, உங்களால் உலகில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களுடன் நட்புறவில் ஈடுபட முடியும்.

இன்றளவில் ஆங்கிலம் என்பது வணிகத் துறையில் முக்கிய ஒரு மொழி

ஆங்கிலமே இன்றைக்கு உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரேயொரு முக்கிய வணிக மொழியாகும். மேலும் உலகளாவிய தொழிலாளர் பட்டியலில் நீங்களும் ஓர் அங்கத்தவராக இடம்பெற வேண்டுமென்றால் நீங்கள் ஆங்கிலம் பேசுவது கிட்டத்தட்ட அவசியமாகிவிட்டது என்றே கூறவேண்டும். உலக நாடுகளின் எல்லைகளைக் கடந்து இடம்பெறும் வணிக தொடர்புகள் பெரும்பாலும் ஆங்கிலதியேலே நடைபெறுவதாகவும், உலகிலுள்ள பல முன்னனி நிறுவனங்கள் உற்பட பல சர்வதேச நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் கட்டாயமாக ஆங்கில மொழியில் நல்ல தேர்ச்சியுடையவர்களாகவும், சரளமாக ஆங்கிலம் பேசக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் ஓர் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

பல உலகப் பிரசித்திபெற்ற நிறுவனங்கள் ஆங்கிலத்தை அவர்களது அதிகாரப்பூர்வ நிறுவன மொழியாக கட்டாயப்படுத்தியுள்ளன. சர்வதேச சந்தையை எடுத்துக்கொண்டாலும் கூட, ஆங்கில அறிவு இன்றி இங்கே உங்களால் எதுவுமே செய்ய முடியாது. ஒட்டுமொத்தத்தில் ஆங்கிலம் கற்றுக்கொள்வது உண்மையில் உங்கள் வாழ்க்கையை முழுமையாகவே மாற்றிவிடும் என்றே கூற வேண்டும்.

ஆங்கிலம் உங்கள் உலகளாவிய பொழுதுபோக்குக்கான வாயில் கதவுகளை திறந்துவிடுகிறது

உலகின் பல சிறந்த திரைப்படங்கள், புத்தகங்கள் மற்றும் இசை என்பவை ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டவையாகும். ஆங்கிலமல்லாத மொழியில் உருவான எந்தவொரு நல்ல திரைப்படமும், உலகளவில் பேசப்படும் போது முதலில் ஆங்கில மொழிக்கு டப்பிங் செய்யப்படுகிறது. அதே போன்று பல பிராந்திய மொழிகளில் எழுதப்பட்ட நல்ல நூல்களும், நாவல்களும் பிற்காலத்தில் ஆங்கில மொழிக்கு மொழிபெயர்க்கப்படுகின்றன. 

ஆங்கில மொழியல்லாத மொழியில் உருவான எந்தவொரு பொழுதுபோக்கு அம்சமும் உலகளாவிய ரீதியில்  பிரசித்தியடையும் போது அது ஆங்கில மொழியில் வெளியிடப்படுகிறது. எனவே, ஆங்கிலம் கற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் பொழுதுபோக்கு உலகின் கதவுகளை திறக்க முடியும், மேலும் இதன் மூலம் உங்களுக்கு உலகின் பல்வேறு நாடுகளின் கலாச்சாரங்கள் பற்றிய புரிதலும் ஏற்படும்.

நீங்கள் நன்றாக ஆங்கிலம் கற்றுக்கொண்டால், உங்களுக்கு பிடித்த நூல்கள், திரைப்படங்கள், பாடல்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரசிக்க இனிமேலும் நீங்கள் ஆங்கில உப தலைப்புக்களையோ, மொழிபெயர்ப்புக்களையே நாட வேண்டிய அவசியம் இருக்காது. உண்மையில் ஆங்கில திரைப்படங்களையும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்ப்பது கூட ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்வதற்கான ஓர் சிறந்த மற்றும் இலகுவான வழி என்றே கூற வேண்டும்.

ஆங்கிலம் இணையவழி கற்றலுக்கும் இணையப் பாவனைக்கும் மிகவும் அவசியமானதாகும்.

புள்ளிவிபரங்களின் அடிப்படையில் ஒருநாளைக்கு 500 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இணையத்தை ஏதோ ஒரு தேவையின் பொருட்டு பயன்படுத்துகின்றனர். அத்துடன் உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட இணையதளங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான இணையதளங்கள் ஆங்கில மொழியில் உருவானவை அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பில் வாசிக்கப்பட்டவையாகும்.

ஆகவே இணையப் பாவனையைப் பொருத்தமட்டிலும் கூட ஆங்கிலம் அதிக தாக்கம் செலுத்துகிறது. ஆங்கில மொழி தெரியுமென்றால் பல்வேறு இணையதளங்களில் உள்ள பல சுவாரசியமான பக்கங்களை உங்களால் வாசிக்க முடியும். 

கற்றல் நடவடிக்கைகளை பொருத்தமட்டிலும் இணையவழியாக நடைபெறும் பெரும்பாலான கற்றல் நடவடிக்கைகள் ஆங்கில மொழியிலேயே நடைபெறுகின்றன. ஆகவே இணையவழி கற்றல் நடவடிக்கைகளுக்கும் ஆங்கிலம் இன்றியமையாத ஒரு மொழி என்றே கூற வேண்டும்.

ஆகவே ஆங்கிலம் கற்றுக்கொள்வது என்பது ஓர் சவாலான மற்றும் அதிக காலம் எடுக்கும் ஓர் விடயமாக நீங்கள் கருதினாலும், நீங்கள் ஆங்கிலத்தை கற்றுக்கொண்டால் அதன் பிரதிபலன்கள் மிகவும் பயனுள்ளவையாகவும், உங்களக்கு பல வாய்ப்புகளை உருவாக்கித் தருபவையாகவும் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
Previous Post Next Post