எழுத்துத் திறனின் முக்கியத்துவம் | Importance of Good Writing Skills


பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, எழுத்து ஒருவரின் கருத்தை மற்றவர்களுக்குத் தெரிவிக்க உதவியுள்ளது. அதே நேரத்தில் எழுத்து உருவாக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்துவந்த வரலாற்றில் அறிவியல் மற்றும் கலாச்சாரம் போன்ற துறைகளில் இற்றைக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பல சமூகங்கள் பயனடைந்துள்ளன. 

இன்றைய காலத்தில், எழுத்துக் கலை எனும் பரிசை நீங்கள் எவ்வாறு வெற்றிகரமாகப் பயன்படுத்துகிறீர்கள் என்பது முற்றிலும் உங்களைப் பொறுத்தது. எழுதுவது என்பது ஒருவரின் வாழ்க்கைத் திறன், இது ஒரு அத்தியாவசிய திறன் என்று மட்டும் கூறவும் முடியாது. முக்கியமாக இது உங்கள் கற்றல், உங்கள் வாழ்க்கைத் தரம், உங்கள் சுய கருத்துக்கள் மற்றும் சமூகத்தில் உங்கள் பங்களிப்பு ஆகியவற்றை மற்றவர்கள் தீர்மானிக்கும் ஓர் அடிப்படை விடயமாகும்.

உங்கள் தொழில் எதுவாக இருந்தாலும், நீங்கள் ஏனையவர்களுடன் உத்தியோகபூர்வமாக தொடர்புகொள்வதற்கு கட்டாயம் எழுத வேண்டும். அதுவும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும். இங்கே மின்னஞ்சல்கள், வணிக குறிப்புகள், அறிக்கைகள், பல்வேறு தொழில்களுக்கான விண்ணப்பங்கள், உங்கள் வியாபார செய்திகளை வெளியிடுதல் போன்றவை முக்கிய இடம் வகிக்கின்றன. 

நீங்கள் ஒரு ஆங்கில செய்தி இணையதளம் வைத்திருப்பவர் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் எழுதும் செய்திகள் வாசர்களின் மனதைக் கவரக்கூடிய தலைப்புகளில் அமைய வேண்டும். மேலும் உங்கள் வாசகரிடமிருந்து நீங்கள் எவ்வாறான ஒரு பின்னூட்டளைப் பெறுவீர்கள் என்பதை உங்கள் எழுத்துத் திறன் தான் தீர்மானிக்கிறது. ஒரு செய்தியை அதன் உண்மைத் தன்மை மாறாமல் பல வடிவங்களில் வாசகர்களிடம் கொண்டு சென்று சேர்த்துவிடலாம். உங்கள் எழுத்துத் திறனில் தான் இவை எல்லாம் தங்கியிருக்கிறது. நீங்கள் எழுதும் விடயத்தைப் பற்றிய ஒரு சிறு தகவல் உங்களிடம் இருந்தால் கூட உங்கள் எழுத்துத் திறமையை பயன்படுத்தி இன்னும் சில தகவல்களை சேர்த்து அதனை உங்களால் பெரிய ஒரு கட்டுரையாக மாற்றி எழுத முடியும்.

நீங்கள் ஆங்கிலத்தில் எழுதும் ஒரு விடயத்தில் விடும் சிறிய ஒரு பிழை ஒரு பெரிய பிரச்சினையாக மாறிவிடவும் வாய்ப்புள்ளது. ஒரு சொல்லில் உள்ள ஒரு எழுத்துப் பிழை அல்லது ஒரு சொல்லின் இடம்பெறும் ஒரு எழுத்தில் ஏற்படும் மாற்றம் நீங்கள் எழுதும் ஒரு கட்டுரையில் இருந்து நீங்கள் சொல்ல வரும் விடயத்தை தலைகீழாக மாற்றிவிடும். ஆகவே ஆங்கில எழுத்துத் திறனில் சிறந்து விளங்க வேண்டுமெனின் நீங்கள் ஆங்கில சொற்களில் அதிகளவு கவனம் செலுத்த வேண்டும். முடிந்தவரையில் அதிகமான சொற்களைத் தெரிந்துவைத்துக்கொள்வதோடு அவற்றை எழுத்துப்பிழையின்றி எழுதவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

நீங்கள் எழுதும் ஒரு விடயம் உங்கள் வாழ்நாட்களின் பிறகும் நீங்கள் யார் என்பதை இந்த உலகுக்கு எடுத்துக்கூறும். உங்கள் அறிவு மட்டம், உங்கள் இயல்புகள், உங்கள் குணாதிசயங்கள் மற்றும் உங்களிடமுள்ள தனித்துவமான திறமைகள் என்பவற்றை உங்கள் எழுத்துத் திறன் உங்கள் வாழ்நாட்களின் பிறகும் இந்த உலகுக்கு எடுத்துக்கூறும். ஒருவரின் எழுத்துத் திறமை அவ்வளவு சக்திவாய்ந்தது என்றே கூற வேண்டும். இன்றைக்கும் பல உலக பிரபலங்கள் எழுதிய நூல்களும், நாவல்களும் இதற்கு சான்றுபகர்கின்றன.

எழுதும் திறனை வளர்த்துக்கொள்வது எப்படி?

எழுதும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டுமெனில் நீங்கள் முதலில் செய்ய வேண்டிய விடயம், உங்கள் எண்ணங்களை ஒழுங்குபடுத்துவது தான். காரணம் பெரும்பாலும் உங்கள் எண்ணங்களை தான் நீங்கள் எழுத்துவடிவில் கொண்டுவரப் போகிறீர்கள். 

நீங்கள் ஒரு ஆய்வுக்கு கட்டுரையொன்றை எழுதுவதாக வைத்துக்கொள்வோம். அதில் நீங்கள் உங்கள் கருத்துக்களை விளக்க வேண்டும், நீங்கள் உங்களிடமுள்ள ஆதாரங்களை முன்வைக்க வேண்டும் மற்றும் உங்கள் வாசகர்களை உங்கள் கருத்துடன் இணங்கவைக்க வேண்டும். உங்கள் கட்டுரையில் நீங்கள் எடுக்கும் முடிவை உங்கள் வாசகர்கள் ஏற்றுகொள்ளுமளவுக்கு உங்கள் எழுத்துத் திறன் அமைய வேண்டும். இங்கே வாசகர்கள் உங்கள் கருத்துக்களையும், உங்கள் முடிவையும் ஏற்றுக்கொள்ளவில்லையெனின் அவர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் மாற்றுக் கருத்துக்களுக்கும் உங்கள் எழுத்துத் திறமையைப் பயன்படுத்தி நீங்கள் முகம் கொடுக்க தயாராக இருக்க வேண்டும். இவை அனைத்துக்கும் உங்கள் எண்ணங்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். 

உங்கள் எழுத்துக்களின் சக்தியைப் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தவும், உங்களைச் சுற்றியுள்ள சூழலை மேலும் அழகானதாக மாற்றியமைக்கவும் முடியும்.
Previous Post Next Post